Updated: March 20, 2014 09:39 IST
ஆலன் லைட்மேன்
அறிவின் சில பகுதிகள் மனிதர்களுக்கு எட்டாதவை என்றும் கடவுள் எதை வெளிப்படுத்துகிறாரோ அதை மட்டுமே நாம் அறிந்துகொள்ள முடியும் என்றும் பல நூற்றாண்டுகளாக மேற்கத்தியக் கலாச்சாரம் நம்பிவந்தது.
16-ம், 17-ம் நூற்றாண்டுகளில் ஒரு புதிய நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் வகையில் நிறைய நிகழ்வுகள் நடந்தன. இந்தப் பிரபஞ்சம் முழுவதையும், குறைந்தபட்சம் அதன் பௌதிக பாகங்கள் முழுவதையும் மனிதர்கள் அறிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கைதான் அது. தடை ஏதுமின்றி அறிவைப் பெறுவதற்கான உரிமையின் மீது கொண்ட அந்த நம்பிக்கைதான் கடந்த 1000 ஆண்டுகளில் நடந்த அறிவு வளர்ச்சியில் மிக முக்கியமான நிகழ்வு.
முன்னுதாரணமற்ற புத்தகம்
அந்தப் புதிய நம்பிக்கையின் மகுடம் என்று ஐசக் நியூட்டனின் ‘பிரின்சிபியா’ (1687) புத்தகத்தைக் கூறலாம். இந்தப் பிரம்மாண்டமான அறிவியல் நூல்தான் நிலைமம் (ஒரு பொருள் ஓய்வு நிலையில் அல்லது சீரான இயக்கத்தில் இருக்கும் பண்புதான் நிலைமம்), விசை போன்ற அடிப்படையான கருத்துகளை நிறுவியது, இயக்கத்துக்கான பொது விதிகளைச் சொன்னது, ஈர்ப்புவிசைக்காகச் சிறப்பு விதியை முன்வைத்தது. நியூட்டனின் இந்தப் புத்தகம் அறிவியல் வரலாற்றில் முன்னுதாரணமற்றது.
அதேபோல் நவீன அறிவியலின் பிறப்பிலும் அது முக்கியப் பங்கு வகித்தது. ஈர்ப்புவிசை குறித்து அவர் உருவாக்கிய விதி மகத்தானதுதான். ஆனால், அதைவிட முக்கியமானது என்னவென்றால், எல்லையற்றும் பிரபஞ்ச அளவிலும் அந்த விதியைப் பொருத்திப்பார்க்கக் கூடிய தன்மைதான். மரத்திலிருந்து ஆப்பிளை விழவைத்த அதே ஈர்ப்புவிசைதான் பூமியை நிலவு சுற்றிவருவதற்கும் காரணமாகிறது.
இப்படியாக, பூமிக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையே கோடு கிழித்து, அரிஸ்டாட்டிலால் பிரித்து வைக்கப்பட்டிருந்த உலகத்துக்கு நியூட்டனின் ‘பிரின்சிபியா' புத்தத்தால் சம்மட்டி அடி விழுந்தது.
பிரபஞ்சம் முழுமைக்கும் பொருந்தும் ஈர்ப்புவிசை என்பது நியூட்டனின் தத்துவம். அந்தத் தத்துவத்தின் ஆழத்தில் மறைந்திருப்பது இதுதான்: ‘இந்தப் பௌதிகப் பிரபஞ்சத்தை மனிதனால் அறிந்துகொள்ள முடியும்.' மனிதப் பிரக்ஞையின் பரிணாமத்தில் இது மிகவும் புதுமையான சிந்தனை. மேலும், புதிய விடுதலை என்றும், மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட புதிய அதிகாரம் என்றும் இந்தச் சிந்தனையைச் சொல்லலாம்.
இந்தச் சிந்தனை இல்லையென்றால், நமக்கு நியூட்டன் கிடைத்திருக்க மாட்டார். நியூட்டனைத் தொடர்ந்து நிகழ்ந்த அறிவுலக, அறிவியல் சாதனைகளும் சாத்தியமாகியிருக்காது.
அவர் கண்டுபிடித்த விதிகளைவிடவும் மிகமிக முக்கியமான வேறொன்றை நியூட்டன் சாதித்திருப்பதை அவருடைய சமகாலத்தவர்களும் உணர்ந்தார்கள். ‘பிரின்சிபியா' நூலின் இரண்டாம் பதிப்பில் தனது நூலறிமுகத்தில் ரோஜர் கோட்ஸ் என்பவர் இப்படி எழுதுகிறார்: “மனித மனதுக்கு எட்டாதவை என்று முன்பு கருதப்பட்டவற்றையும் எட்டிப்பிடித்த சாதனையை நியூட்டன் நிகழ்த்தியிருக்கிறார்… இப்போது கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன.”
நவீன அறிவியலின் வரலாறு
நியூட்டனின் ‘பிரின்சிபியா'வில் காணப்படும் புதிய உளவியலை உருவாக்கியது எது? மதச் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்கள் நிச்சயமாக இதில் பங்கு வகித்தன. 1517-ம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங்கின் பிரகடனங்கள் புராட்டெஸ்டண்டு பிரிவைத் தோற்றுவித்ததுடன், திருச்சபையின் அதிகாரங்களைக் குறைத்தன. பைபிளை ஒவ்வொரு தனிமனிதரும் படித்துப் புரிந்துகொள்ள முடியும்.
அதற்காக அவர்கள் பாதிரியார்களாக ஆக வேண்டும் என்பதில்லை என்று அவர் சொன்னது புதுவிதமான ஓர் அக விடுதலையை ஊக்குவித்தது. மதரீதியான இந்தச் சுதந்திரம் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளுக்கும் பரவியது.
இதைத் தொடர்ந்து நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. 1572 நவம்பர் 11-ம் தேதியன்று, சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, டிக்கோ ப்ராயே என்ற டேனிஷ் வானியலாளர் காஸ்ஸியபியா நட்சத்திரக் கூட்டத்தில் மிகமிகப் பிரகாசமாக ஒளிரும் ஒரு பொருளைக் கண்டார். அதற்கு முன்னால் அந்தப் பொருளை அங்கே பார்த்ததில்லை என்பதையும் அவர் உணர்ந்தார்.
ப்ராயே கண்டுபிடித்தது வேறொன்றுமில்லை, பெருநட்சத்திர வெடிப்புதான் அது. நட்சத்திரங்களெல்லாம் அழிவற்றவை, மாறாதவை என்ற பழம் நம்பிக்கைகளை ப்ராயேயின் கண்டுபிடிப்பு வெடிக்கச் செய்தது.
பிறகு, விண்ணுலகங்களின் தெய்விகப் பூரணத் தன்மை இத்தாலிய இயற்பியலாளர் கலிலியோவாலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அவர் தனது புதிய தொலை நோக்கியை 1610-ல் நிலவை நோக்கித் திருப்பினார். “விண்வெளியில் இருக்கும் நிலவு முதலானவை சீராகவும், சமமாகவும், பரிபூரணக் கோளமாகவும் இருக்கும் என்று காலம்காலமாகத் தத்துவஞானிகள் சொல்லிவந்தார்கள்.
ஆனால், அதற்கெல்லாம் நேரெதிராக நிலவு மேடும் பள்ளமுமாக, கரடுமுரடாக, சீரற்ற பரப்பைக் கொண்டிருந்தது” என்கிறார் கலிலியோ.
நியூட்டன் பிறப்பதற்கு முந்தைய சில தசாப்தங்களில் வாழ்ந்த ரெனே தெகார்தேவின் தத்துவங்களும் அப்போது பெரும் செல்வாக்கு செலுத்தின. தன் இருப்பு உள்பட எல்லாவற்றின் இருப்பையும் சந்தேகிக்கக்கூடிய ஒரு தத்துவப் போக்கை முதன்முறையாக தெகார்தே தொடங்கிவைக்கிறார். “நான் சிந்திக்கிறேன். எனவே, நான் இருக்கிறேன்” என்றார் அவர்.
நியூட்டனின் பிரபஞ்சம் தழுவிய இயற்பியல் விதிக்கு முன்வடிவம் போன்ற ஒரு கருதுகோளை தெகார்தே முன்வைத்தார். அதற்கு ‘சுழல்கள்' என்று பெயர். ஆனால், இதை நிரூபிக்க முடியாமல் போனாலும் பூமியிலும் பிரபஞ்ச அளவிலும் நிகழும் எண்ணற்ற நிகழ்வுகளை விளக்கவும் ஒருங் கிணைக்கவும் கூடிய ஒரு துணிவை அவருடைய சித்தாந்தம் தந்தது.
பௌதிகப் பிரபஞ்சத்துக்கும் ஆன்மிகப் பிரபஞ்சத்துக்கும் இடையில் ஒரு வரையறை இருந்தது. மேற்கண்ட முன்னேற்றங்களெல்லாம் அந்த வரையறையை மாற்றியமைத்ததையும் தெளிவுபடுத்தியதையும் நம்மால் உணர முடியும். கொஞ்சம்கொஞ்சமாக, அரிஸ்டாட்டிலின் ‘புனிதப் புவியிய'லின் இடத்தை மேலும் நுட்பமான, அருவமான உலக வரைபடம் ஆக்கிரமித்துக்கொண்டது.
இந்த வரைபடத்தில் பௌதிக உலகம் இருக்கிறது. எலெக்ட்ரான்கள், அணுக்கள், ஒளி, வெப்பம், மூளைகள், நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகிய பருப்பொருட்கள்-ஆற்றல்கள் எல்லாம் இந்த வரைபடத்தில் அடக்கம். பரந்துவிரிந்த இந்தப் பிரபஞ்சம் அறிவியல் ஆய்வுகளுக்கும் கணித விதிகளுக்கும் உட்படுத்தக் கூடியதாக இருந்தது.
இந்த பௌதிகப் பிரபஞ்சத்துடன் இணையாக இருப்பது ஆன்மிகரீதியிலான பிரபஞ்சம். இந்தப் பிரபஞ்சம் அளவிட முடியாதது, இடம் சாராதது, அணுக்களாலோ மூலக்கூறுகளாலோ உருவாகாதது.ஆனால், அதில் நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை எங்கும் நிறைந்திருப்பது அது. இந்த இரண்டு பிரபஞ்சங்களும் எண்ணற்ற, முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.
ஆனாலும், அறிவியலின் களம் என்பது பௌதிகப் பிரபஞ்சம்தானே தவிர, ஆன்மிகப் பிரபஞ்சம் அல்ல. இந்தப் பிரபஞ்சம்குறித்து அறிவியலால் எண்ணற்ற விஷயங்களைச் சொல்ல முடியும். ஆனால், ஆன்மிகப் பிரபஞ்சம்குறித்து அதனால் எதையும் சொல்ல முடியாது. பிரபஞ்சம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த ‘பெருவெடிப்பு' (பிக் பேங்) நிகழ்ந்த ஒரு நுண்விநாடிக்கும் (நானோசெகண்ட்) குறைவான கால அளவு வரை எட்டிப்பார்க்க அறிவியலால் முடியும்.
ஆனால், பிரபஞ்சம் ஏன் உருவானது, அதற்கு ஏதாவது நோக்கம் இருக்கிறதா என்ற கேள்விகளுக்கெல்லாம் அறிவியலால் பதில் சொல்ல முடியாது.
அறிவின் சில பகுதிகள் மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது என்ற எண்ணம் எல்லா உணர்வுகளை யும்போல நம் ஆழ்மனதில் உறைந்துகிடக்கிறது. அதை நமது பிரக்ஞையிலிருந்து அவ்வளவு எளிதாக வெட்டியெறிந்துவிட முடியாது. மேரி ஷெல்லியின் புகழ்பெற்ற ‘ஃப்ராங்கென்ஸ்டைன்' நாவலில் (1818) இப்படி வரும்: “அறிவைப் பெறுதல் என்பது எவ்வளவு ஆபத்தானது. தனது இயல்பு அனுமதிக்கும் அளவையும் கடந்து மிகப் பெரிய உயரத்தை அடைய நினைப்பவனைவிட, தான் இருக்கும் ஊர்தான் உலகம் என்ற நினைப்பில் வாழும் மனிதன் எவ்வளவு மகிழ்ச்சியானவன்!”
அழிவுக்கான ஆக்கமா?
நியூ மெக்ஸிகோவில் முதல் அணுகுண்டுச் சோதனையை அமெரிக்கா நடத்தியபோது வெளிப்பட்ட பயங்கரம் என்பது, நம் இயல்பைவிட அதீதமான சக்திகளை நாம் கட்டவிழ்த்துவிட்டோம் என்பதற்கான அடையாளமே. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததும் அணுகுண்டுத் தயாரிப்புத் திட்டத்தின் (மன்ஹாட்டன் புராஜெக்ட்) தலைவரான ராபர்ட் ஓப்பன்ஹீமர், “அப்போது நாங்கள் புரொமிதியஸ் கதையைப் பற்றியும் மனிதனின் புதிய சக்திகள்குறித்த ஆழமான குற்றவுணர்வைப் பற்றியும் நினைத்துக்கொண்டோம்” என்றார்.
படியாக்கத்தின் (குளோனிங்) மூலம் டாலி என்ற ஆட்டை உருவாக்கியபோது, “நவீன வாழ்க்கையின் மதிமயக்கக்கூடிய கதவுகள் திறந்துபார்க்கக் கூடாதவை என்று மூடப்பட்டிருந்தன. அந்தக் கதவுகளைத் திடீரென்று திறந்து, ரகசியங்களை எட்டிப்பார்த்ததுபோல இருக்கிறது” என்று ‘நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை எழுதியது.
திறக்கப்படும் ஒவ்வொரு கதவும் தொடர்ந்து நமக்கு உறுத்தலையும் குற்றவுணர்வையும் ஏற்படுத்தக்கூடும். நாம் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் ஆதிவாசிகளாகவும் ஒரே நேரத்தில் இருக்கிறோம். நியூட்டனின் சிந்தனைப் பாய்ச்சலும் நாமே, கல்லோடு சேர்த்துக் கட்டப்பட்ட புரொமிதியஸும் நாமே. டி.என்.ஏ-வின் ரகசியங்களைக் கட்டவிழ்த்துவிட்ட வாட்சன்–கிரிக்கும் நாமே, ஆதாம்-ஏவாளும் நாமே.
பல நூற்றாண்டுகளின் விடுதலை உணர்வும் சிறைவாசமும் படைப்புத்திறனும் பயங்கரமும் ஒன்றாக ஒரே வீட்டில் வசிக்கின்றன. திறக்கும் ஒவ்வொரு கதவும் நம்மைத் தொந்தரவுக்குள்ளாக்கும். இருப்பினும், தொடர்ந்து நாம் கதவுகளைத் திறந்துகொண்டிருப்போம்; ஏனெனில், நம்மை யாராலும் எதனாலும் தடுக்கவே முடியாது.
© ‘நியூயார்க் டைம்ஸ்', தமிழில்: ஆசை
(மார்ச் - 20, நியூட்டன் நினைவு நாள்)
No comments:
Post a Comment